தமிழின் முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவரான எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் உலக இலக்கியக் கொண்டாட்ட வரிசையில் ஸ்டிஃபன் ஸ்வேக்கின் தி ராயல் கேம்புதினத்தைப் பற்றிப் பேசும் காணொளியைப் பார்த்தவுடன் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.


                                                          


ஸ்டீஃபன் ஸ்வேக்கை எதேச்சையாகத் தான் ஐந்து வருடங்களுக்கு முன் நான் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் தொடர்ந்து அவரை  வாசிக்கவில்லை.  கடந்த வருடம் இதே குளிர் காலத்தில் மீண்டும் அவரை  நான் எதிர்கொண்டேன்.  அதுவும் துருக்கியில் ! அன்றே தீர்மானித்தேன், விரைவில் இவரை நான் கொல்ல வேண்டுமென்று!

இருத்தலியல் (Existentialist) பிரதிகளைக் கட்டுடைத்து புதிய அர்த்தங்களைக் காண வேண்டும் என்று முடிவெடுத்திருந்த தருணம் அது. சாமுவேல் பெக்கெட்டின் “வெய்டிங் ஃபார் கோடா” போன்ற படைப்புகளுடன் ஸ்வேகின் அமோக்கும் பின் நவீன எழுத்துக்களாய் எனக்கு தென்பட்டாலும் அந்த உந்துதலை எழுத முடியாமல் கைவிட்டிருந்தேன். ஆனால் அப்படிப்பட்ட உந்துதலொன்று  துருக்கியில் என்னையை மீண்டும் அரவணைத்துக் கொண்டு கன்னடத்தில் எழுத வைத்தது.  


               

இஸ்தான்புல் நகரத்தில் நான் கண்டது ஸ்வேக்கின் கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் அவன் புத்தகங்கள்! கப்பலில் போய்க்கொண்டிருக்கையில் பார்த்தேன், குறைந்தது பத்து நபர்கள் கையிலாவது ஸ்வேக்கின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருந்தன! அப்பொழுது எனக்குத் தோன்றியது இந்த அனுபவத்தைப் பற்றி  கன்னடத்தில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று.  அதிலும் முக்கியமாக அவருடைய “அமோக்புதினத்தைப் பற்றி. ஆனால் அப்படி எழுதி அமோக்லிருந்து என்னை விடுவித்துக்கொள்ள இயலாமல் நம் எழுத்துக்குள்ளேயே அவரைக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் என்னும் யோசனை வந்தது. 



                                                            இஸ்தான்புல் நகரம்


ஆங்கிலத்தில் அமோக்  என்கிற சொல் பித்து நிலை அல்லது சித்த பிரமை கலைந்த நிலையின் குறியீடாக பயன்படுத்தப் படுகிறது. ஐரோப்பாவிற்கு மிகவும் அந்நியமான அந்தச் சொல்லை ஸ்வேக் முதன்மைப் படுத்தியதால் தான் வழக்கத்திற்கு வந்ததா என்பது தெரியவில்லை. இந்தோனேசியாவில் புழங்கும் அந்த அனுபவத்தை வெறும் சொற்களில் சொல்லித் தீர்க்க முடியாத இயலாமையை ஸ்வேக் தன் புதினத்தில் வரைந்து காட்டுகிறார் என்றே நான் புரிந்து கொண்டேன். அதோடு அவர் நிற்கவில்லை, அதையும் தாண்டி ஜோசப் கான்ராட் போல காலனி ஆதிக்கத்தை விமர்சிக்கிறார் என்றும் வாசிக்க கூடும். ரோலா பாஃக்த் கூறும் “எழுதும் பிரதி” ( Writerly Text ) தான் ஸ்வேகின் “அமோக்.



துருக்கியிலிருந்து நான் திரும்பி வசிப்பிடம் சவுதி அரேபியாவிற்கு வந்த நாளே கன்னடத்தில் ஒரு குறுநாவல் எழுதினேன். எழுதும் மன ஓட்டத்தில் ஸ்வேக்குடன் மாத்தாஹரியும் சேர்ந்து கொண்டார். அவரும் ஐரோப்பாவிலிருந்து இந்தோனேசியா போனவர்; அது மட்டுமல்லாமல் அவரும் "அமோக்குள்ளானவர்" தானே!? இந்த இருவரோடு சேர்ந்து நான் அந்தக் கன்னட குறுநாவலை எழுதி முடித்தேன். ஆனால் பிரசுரப்படுத்த மனமின்றி கனினியிலும் என் கண்களிலும் அது அலைந்து கொண்டே இருக்கிறது. 

பார்ப்போம்... 

ஒரு நாள் ”அமோக்குள்ளாய்” அதைச் சீண்டுவேன், அல்லது கிழித்தெறிந்து இந்தோனேசியாவிற்கு நடந்தே போய்விடுவேன்.  

- கனகராஜ் பாலசுப்பிரமணியம்


ஸ்டிஃபன் ஸ்வேக்கின் தி ராயல் கேம்” புதினத்தைப் பற்றி எஸ் ரா பேசிய காணொளி 





Comments